Friday, May 23, 2014

கவனமின்மையா? காழ்ப்புணர்ச்சியா?

              இந்திய 16-வது பாராளுமன்ற தேர்தல் பல கட்டங்களாக நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வார காலம் நிறைவடைந்துவிட்டது.

                தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்ததை அடுத்து, நாடெங்கிலும் உள்ள விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள், கடை பெயர் பலகைகள் முதற்கொண்டு, அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள், படங்கள், அரசியல் கட்சி சின்னங்கள் (பிரச்சார உபயோகம் இல்லாதவை) ஆகியவை மறைக்கப்பட்டன.

                   அதன் தொடர்ச்சியாக, திருவாரூரில், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் வரும் ‘சட்டமன்ற உறுப்பினர்’ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட தெற்கு வீதியில் உள்ள ‘பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை’ கட்டிடத்தில் பொறிக்கப்பட்டிருந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க. தலைவர் திரு. டாக்டர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பெயர் மறைக்கப்பட்டிருந்தது. 




படங்கள் எடுக்கப்பட்ட நாள் : 22 மே, 2014, காலை மணி 10.45


                மேலும், திருவாரூர் நகராட்சியின் புதிய கட்டிட வளாகத்திலும், கலைஞர்  மு. கருணாநிதி அவர்கள் பெயரால் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் பெயர் பலகையில் பொறிக்கப்பட்டிருந்த அவரின் பெயரும் மறைக்கப்பட்டிருந்தது.

              அதேசமயம், தற்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்து, ஏறத்தாழ நான்கைந்து நாட்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று (மே 22, 2014, வியாழன்)  வரை மூடி வைக்கப்பட்ட அந்த பெயர் திறக்கப்படவில்லை. திரை அகற்றப்படவில்லை.


            தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே, அந்தப் பெயர் பலகைகள் மூடி வைக்கப்பட்டதை திருவாரூர் மக்கள் நன்கறிவர்.

        ஆனால், தற்போது, நடத்தை விதிமுறைகள் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு நாட்கள் நகர்ந்த பின்னும், அவை திறந்துவிடப்படாமல் இருப்பது நகராட்சியில் ஆளும் கட்சியாக (நகர்மன்ற தலைவர் அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்) இருப்பவர்கள் மெத்தனத்தையும், ஆளும் கட்சியை விட, திருவாரூர் சட்டமன்ற தொகுதியிலும், திருவாரூர் நகரப் பகுதிகளிலும் தி.மு.கழகம் அ.தி.மு.க.-வை விட அதிக வாக்குகள் பெற்றுவிட்டதன் விளைவாக ஏற்பட்ட ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி’யையுமே காட்டுவதாக தெரிகிறது.

         நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்த உடனே மிகக் கவனமாக மறைக்கப்பட்ட அப்பெயர் பலகைகள், விதிமுறைகள் முடிவுக்கு வந்து இத்தனை நாட்கள் ஆகியும், இன்னமும் திறக்கப்படாமல் இருப்பது கவனக்குறைவு என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

               தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டரை ஆண்டு காலமாகவும், திருவாரூரில் எந்த ஒரு மக்கள் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படாமல், உறங்கும் நிர்வாகமாகவே அ.தி.மு.க.வின் நகர்மன்ற தலைவர் தலைமையிலான நகராட்சி நிர்வாகம் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், அவர்களால் எவ்வாறு நகர்ப்பகுதியில் தி.மு.க.வை விட அதிக வாக்குகள் பெற்றிருக்க முடியும்.

        திருவாரூர் நகர தி.மு.க. செயலாளர் அண்ணன் இரா. சங்கர் அவர்களின் சீரிய செயல்பாட்டால், கழகம் அதிக வாக்குகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

               இதை மனதில் வைத்தே, அ.தி.மு.க.வின் நகர்மன்ற தலைவர் இந்த, பெயர் பலகை மறைப்பை விலக்கும் செயலில், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக தோன்றுகிறது.

                நீங்கள் எதைக் கொண்டு ‘அவர்’ பெயரை மறைத்தாலும், ‘எத்தனை காலம்’ மறைத்தாலும், அவ்வளவு ‘எளிதில்’ மக்கள் மனதிலிருந்து மறையக்கூடிய ‘பெயரா’ அது. அவ்வளவு ‘சீக்கிரம்’ மறையக்கூடியவரா அவர்...?

            இந்த விஷயத்தில், தி.மு.க. வின் நகர்மன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தி, அப்பெயர் பலகைகளை விரைவாக திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்...

-- நகர தி.மு.க. இணையதள போர்படை, திருவாரூர்.