Wednesday, August 15, 2012

‘டெசோ’ மாநாடு ஆய்வரங்கில் கலைஞரின் தலைமை உரை


ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு குறுகிய கால, நீண்ட காலத் தீர்வுகள் தேவை.
கட்டுமான பணிகள், கவுரவ வாழ்க்கை உடனடித் தேவை .
-  ‘டெசோ’ மாநாடு ஆய்வரங்கில் கலைஞரின் தலைமை உரை.


சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள ‘அக்கார்ட்’ ஓட்டல் கருத்தரங்க மண்டபத்தில் ‘டெசோ’ மாநாட்டிற்கு வந்திருந்த பன்னாட்டு அறிஞர்களின் கூட்டம்
கடந்த 12-ம் தேதி (12-08-2012) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

அப்போது ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு குறுகிய கால, நீண்ட கால தீர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் என்பதையும்;
கட்டுமானப் பணிகள் மற்றும் கவுரவமான வாழ்க்கை உடனடித் தேவை என்பதையும் கலைஞர் வலியுறுத்தினார்.

ஆய்வரங்கத்தில் கலைஞர் அவர்கள் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களே, லோக் சக்தி கட்சியின் தலைவரும் எனது நீண்ட நாள் அருமை நண்பருமான நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களே, சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திரு. ராம்கோபால் யாதவ் அவர்களே,
தேசிய மாநாட்டுக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எஸ்.டி. ஷாரிக் அவர்களே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் திரு. கோவிந்த ராவ் ஆதிக் அவர்களே,
ஒருங்கிணைந்த ஜனதா தளக் கட்சியின் திரு. கே.சி. தியாகி அவர்களே, நவ சம நமாஜா கட்சியின் தலைவர் டாக்டர். விக்ரம் பகு கருணா ரத்னே அவர்களே,
மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, நைஜீரியா, ஸ்வீடன், நார்வே, மொராக்கோ, துருக்கி, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில்
இருந்து வந்துள்ள மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் திரு. கி. வீரமணி, திரு. தொல். திருமாவளவன், திரு. சுப. வீரபாண்டியன், திருமதி. சுப்புலெட்சுமி ஜெகதீசன் அவர்களே,

வரவேற்புக் குழுவின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே, இலங்கையில் இருந்து வந்திருக்கும் தமிழ் இனத்திற்கு வழிகாட்டும் ஒளி விளக்குகளே, மதிப்பிற்குரிய
நாடாளுமன்ற உறுப்பினர்களே, நண்பர்களே,

ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியல் ஏற்பட வேண்டும் என்பதற்காக தங்களின் வாழ்க்கையை போர்க் களத்தில் ஈந்து, கல்லறைகளில் இடம் பெற்றிருக்கும் வீரத் தியாகிகளுக்கு
முதற்கண் எனது பணிவான, மரியாதை கலந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான, திரு. ராம்விலாஸ் பாஸ்வான், பேராசிரியர். திரு. ராம் கோபால் யாதவ், திரு. எஸ்.டி. ஷாரிக், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
திரு. கோவிந்தராவ் ஆதிக், திரு. கே.சி. தியாகி ஆகிய அனைவரும், ஏழை மற்றும் கீழ் நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வரும் பொதுமக்களின் நன்மதிப்பைப்
பெற்று விளங்கும் தலை சிறந்த அரசியல் மேதைகளாவர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, நைஜீரியா, ஸ்வீடன், நார்வே, மொராக்கோ, துருக்கி, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து மதிப்பு மிகுந்த நமது
பிரதிநிதிகள், தங்களின் மதிப்பு மிகுந்த கருத்துகளை, ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டி, நீண்ட தூரம் பயணம் செய்து இந்த மாநாட்டிற்கு வந்துள்ளனர்.

தமிழ் ஈழ மக்களால் மிகவும் மதிக்கப்பட்டு ஓர் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள, மிகவும் புகழ் பெற்ற இலங்கை தமிழர் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது தங்களது கடமை என்று எண்ணி இலங்கையிலிருந்து வந்திருக்கிறார்கள்.

உங்கள் ஒவ்வொருவரையும் மிக்க அன்புடன் வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எங்களது அழைப்பை ஏற்று, அருகில் இருந்தும், நீண்ட தொலைவில் இருந்தும்
நீங்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருக்கிறீர்கள். டெசோ அமைப்பின் சார்பாக சென்னைக்கு வருவதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட துன்பங்களுக்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி நிரம்பியவனாக
இருக்கிறேன்.

இந்த மாநாட்டில் எத்தகைய மக்கள் கூடியிருக்கிறார்கள் என்பதே, ஈழத் தமிழர்களின் பிரச்சினை பற்றிய தமிழ்நாட்டின் கவலையை மட்டுமல்லாமல், இந்தியாவின் கவலையையும்,
உலக நாடுகளின் கவலையையும் விளக்கும் வகையில் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகும்.

இலங்கையில் உள்நாட்டுப் போருக்கு முன்னும் போருக்குப் பின்னும் நடந்தேறிய நிகழ்வுகளைப் பற்றி உலகின் நாடுகள் அனைத்தும் மிகவும் கவலை கொண்டுள்ளன. ஈழத் தமிழர்களின்
பிரச்சினை மனிதத் தன்மை, மனித நேயம், மனித உரிமைகள் மற்றும் மனிதரின் கவுரவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரச்சினையாகும். எனவே, தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி மேற்கொள்ளப் படும்
தீர்மானங்கள் பற்றி உலக நாடுகள் அறிந்து கொள்ள ஆவலாக இருப்பது இயல்பேயாகும்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தீயின் மேல் தொங்கிக் கொண்டிருப்பதைப் போல் உள்ளன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்படும் நீண்ட கால தாமதம்,
நாகரிகத்தையும், பண்பாட்டையும் பல நூற்றாண்டு காலத்துக்கு பின்னோக்கி இழுத்துச் செல்வதாக அமைந்துவிடும். முன்னதாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்ட இந்த இனப்படுகொலை, கொடிய குற்றங்கள்,
ஒரு தேசிய இனத்தை மதம், மொழி, கலாச்சார அடிப்படையில் காட்டுமிராண்டித்தனமாக நடத்தியது, பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் அடக்கி ஒடுக்கப்பட்டது ஆகியவற்றுக்கு நாம் சாட்சியங்களாக
இருந்த காரணத்தால் வருங்காலத் தலைமுறையினர் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள்.

மதுரை டெசோ மாநாடு!

இந்த மாநாட்டைப் பார்க்கும்போது எனது நினைவு பழைய காலத்திற்குத் திரும்பிச் செல்கிறது. 1986 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி, தமிழ் இலக்கியத்துக்கும், பாண்டிய நாட்டுக்கும்
தலைநகராக விளங்கிய மதுரையில், இது போன்ற ஒரு மாநாட்டை டெசோ அமைப்பு நடத்தியது. அந்த மதுரை மாநாடு முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையிலும், சந்தர்ப்பத்திலும் நடந்தது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பேயி, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் திரு. என்.டி. ராமராவ், உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் எச்.என். பகுகுணா மற்றும் பல முக்கியமான
தலைவர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர். அனைத்து தமிழ் அமைப்புகளும், தீவிர போராளி அமைப்புகளும் அந்த மாநாட்டில் பங்கு பெற்றன.

அந்த மாநாட்டில், சகோதர உறவுகளிலும், பாசத்திலும் இருந்து ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு உருவாக வேண்டும் என்று நாம் இந்தியாவின் பக்கத்திலிருந்து வலியுறுத்தினோம்.
அப்போது நான் எனது கைகளைக் கூப்பி உணர்ச்சி மிகுந்த, கனிவான வேண்டுகோள் ஒன்றை போராளி அமைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் விடுத்தேன்.

தமிழ்நாட்டு மக்களின் இதயங்கள் எவ்வாறு வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கின்றன, அவர்களின் ரத்தம் எவ்வாறு கொத்தித்துக் கொண்டிருக்கிறது, இலங்கைத் தமிழர்களுக்காக அவர்களின் நரம்புகள்
எவ்வாறு துடித்துக் கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு முழுமையான தோற்றத்தை அந்த மதுரை டெசோ மாநாட்டில் நான் திரட்டித் தந்தேன்.

மதுரை டெசோ மாநாட்டுக்கு முன்பு, டெசோ அமைப்பின் சார்பாக, ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு பொது மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக, 1985 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கோவை,
திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் பேரணிகளும், பொதுக் கூட்டங்களும் நடத்தப் பட்டன.

40 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வின் தலைவராக உள்ள நிலையில், ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் எனது கட்சி ஆற்றிய பங்கினைச் சுட்டிக்காட்டுவது
எனது புனிதமான கடமையும், உரிமையும் ஆகும். இதனை மிகவும் சுருக்கமாகக் கூற தயவு செய்து என்னை அனுமதிக்கவும்.

தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலமாக தனது உறுதியான, உணர்வுபூர்வமான ஆதரவை அளிப்பதில் தி.மு.க. உறுதியாக
இருந்திருக்கிறது என்ற உண்மைக்கு வரலாற்று நிகழ்வுகளே சான்றுகளாக அமைந்துள்ளன.

‘ஈழ காந்தி’ தந்தை செல்வா அவர்களின் காலத்தில் தொடங்கி, அமிர்தலிங்கம் அவர்கள் காலத்தில் தொடர்ந்து, இன்று வரை நீடித்திருக்கும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக தி.மு.க.
அளித்த ஆதரவு அதன் இதயம் மற்றும் மனத்தில் இருந்து பொங்கி வந்ததாகும்; அந்த ஆதரவில் நாங்கள் தொடர்ந்து உறுதியாகவும்; ஆர்வத்துடனும் இருந்து வந்திருக்கிறோம்.

எங்களை உருவாக்கிய தலைவர், பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில், 1956 ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், ‘இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே’
என்னும் தமிழ் மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கி, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்தும் இலங்கை அரசின்
அடாத, கொடுமையான முயற்சிகளைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை நான் முன்மொழிந்தேன். இந்தத் தீர்மானத்தை பூவலூர் பொன்னம்பலனார் அவர்கள் வழி மொழிந்தார்கள்.

அண்ணா அவர்களால் தீர்மானம்

1961 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற நமது பொதுக் குழுக் கூட்டத்தில் ஒரு முக்கியமான தீர்மானம் அறிஞர் அண்ணா அவர்களாலேயே தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டது..
அந்தக் கூட்டத்தில் அந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிந்தேன். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை அய்க்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு இந்திய அரசு கொண்டு செல்ல வேண்டும் என்ற அந்தத்
தீர்மானம் வலியுறுத்தியது.

இவ்வாறு அய்க்கிய நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று முதன் முதலாகக் கோரியது தி.மு.க. தான்.

கண்ணீரைப் பொழிய வைத்த தந்தை செல்வா அவர்களின் மறைவுக்குப் பிறகு, அமிர்தலிங்கம் 1977 இல் இந்தியாவுக்கு வருகை தந்தார். அவருக்கு தி.மு.க முழு ஆதரவு அளித்தது.
உண்மையில், இலங்கையில் நிலவும் சூழ்நிலை பற்றி விளக்கிக் கூற டில்லியில் உள்ள பல்வேறு தலைவர்களை சந்திக்க நாங்கள் அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தோம்.

இலங்கையில் 1983 இல் ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது, நானும், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களும் தமிழ் நாடு
சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம்.

இலங்கை அரசமைப்பு சட்டத்தின் 6 ஆவது திருத்தத்தை கறுப்பு சட்டம் என்று கூறி அதன் நகலை 1983 ஆகஸ்டில் நான் எரித்தேன். ஈழத் தமிழர்கள் தங்கள் விடுதலையைப் பற்றி
பேசுவதையே அந்த சட்டத்திருத்தம் தடை செய்தது. சட்டநகலை எரிக்கும் முன் “இந்தத் தீ பரவி ஈழத் தமிழர்களின் துன்பங்களையும் பொசுக்கட்டும்” என்று கூறினேன்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினையில் அய்க்கிய நாடுகள் அவை தலையிட வேண்டும் என்று வலியுறுத்தும் பொது மக்களின் ஒரு மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. முதன்
முதலாகத் தொடங்கியது.

26-9-2009 அன்று காஞ்சிபுரத்தில் கொண்டாடப்பட்ட அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில், “ஈழத் தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழ்கின்றனர்.
அதனால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈழத் தமிழர்களுக்கு பலத்த ஆதரவு அளித்தது என்ற ஒரே காரணத்துக்காக தி.மு.க. தலைமையிலான அரசு இரு முறை இந்திய அரசால் கலைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி நான் பல முறை நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். தி.மு.க. இது பற்றி தீர்மானங்களை பல முறை, தனது மாநாடுகளிலும்,
பொதுக்குழுக் கூட்டங்களிலும் நிறைவேற்றியிருக்கிறது. அதே போல பல கண்டனக் கூட்டங்களையும், பொதுக் கூட்டங்களையும், பேரணிகளையும், மனிதச் சங்கிலிப் போராட்டங்களையும், பட்டினிப்
போராட்டங்களையும், வேலை நிறுத்தப் போராட்டங்களையும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஆதரவாக ஏற்பாடு செய்து தி.மு.க. நடத்தியுள்ளது. ஒரு மக்களாட்சி நடைமுறையில் செய்யக்கூடிய அனைத்து
வகையான போராட்டங்களும் உண்மையான உணர்வுடன் எங்களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டன.

நீண்ட மனித சங்கிலி

தமிழ்நாடு மாநில ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும் கூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகத்தான் 24-10-2008 அன்று சென்னை மாநகரின் பாரிஸ் முனையில் இருந்து
செங்கல்பட்டு வரை 60 கி.மீ. தொலைவிலான ஒரு நீண்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். அனைத்துக் கட்சித் தலைவர்களும் லட்சக்கணக்கான பொது மக்களும் அந்த மனிதச் சங்கிலிப்
போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டனர்.

2008-09 இல் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் போரின் இறுதி நிலைகளிலும் கூட, தேவையின்றி இரத்தம் சிந்தப்படுவதைத் தடுத்து நிறுத்த பலவிதமான நடவடிக்கைகள்
மேற்கொள்ள தி.மு.க. தன்னால் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டது. போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற நல்ல செய்தி 27-04-2009 அன்று காலை 5 மணி வரை எதிர் பார்த்தப்படி வராததால், அண்ணா சமாதியில்
சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தை நான் மேற்கொண்டேன். அப்போது கூட்டப் பட்ட இலங்கை அரசின் பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டத்தில், நடந்து கொண்டிருக்கும் போர், எனது பட்டினிப் போராட்டம்
உள்ளிட்ட அப்போதிருந்த அனைத்து சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு போரை நிறுத்த முடிவு செய்தது. போர் நிறுத்தப்பட்டது என்று இலங்கை அரசு அறிவித்ததன் அடிப்படையில், இந்தியாவின் அயல்துறை
அமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதன் நகல் ஒன்றினை நான் பட்டினிப் போராட்டம் மேற்கொண்டிருந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார். போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று நான் நம்பியதால், எனது பட்டினிப்
போராட்டத்தை நான் கைவிட்டேன். ஆனால் நடந்தது என்னவென்றால், இலங்கை அரசு இந்திய அரசுக்கு தவறான தகவல் தந்து தவறாக வழிநடத்திவிட்டது என்பதுதான். இந்திய அரசின் கூற்றையே நானும் ஒட்டு
மொத்த உலகமும் நம்ப வேண்டி இருந்தது.

இவற்றையெல்லாம் நான் உங்களிடம் கூறுவதன் காரணம் ஏதோ உங்கள் மனதையெல்லாம் கவரவேண்டும் என்பதற்காக அல்ல. இலங்கையில் சூழ்நிலையைப் பற்றிய உங்கள் கருத்தை வடிவமைக்க
அது உதவியாக இருக்கும் என்பதாலேயே அவற்றையெல்லாம் நான் கூறுகிறேன். உங்கள் ஆலோசனைகளை அளிக்க அது உதவக்கூடும்.

இந்த மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டுள்ள அனைவரிடையேயும் ஒரு கொள்கை அறிக்கை சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுவே, முழுமையானதாக இருக்க முடியாது. ஆனாலும், ஈழத் தமிழர்களின்
மறு குடியேற்றம், நிவாரணம், மறுவாழ்வு ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டுவதாக அது இருக்கும்.

2009 போருக்கு முன்னும், பின்னும் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையைப் பற்றி இந்த அறிக்கை சுட்டிக் காட்டுவதாக இருக்கும். தமிழ் மக்கள் எவ்வாறு இரண்டாம் தரக்குடிமக்களாக
நடத்தப்பட்டனர், அரசமைப்பு சட்டப்படியான உரிமைகளும், வாய்ப்புகளும் அவர்களுக்கு எவ்வாறு மறுக்கப்பட்டன என்பதைப் பற்றி அது வெளியே கொண்டு வந்து காட்டும்.

தமிழ் இன மக்களின் கவுரவத்தையும், கலாச்சார அடையாளத்தையும் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட, ஆயுதப் போராட்டம் உள்ளிட்ட எண்ணற்ற முயற்சிகளை காட்டுவதாக இருப்பது அது.

மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு

மோசமான போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசு செய்துள்ளது என்பது பற்றிய நடுநிலையான அமைப்புகளின் பல்வேறுபட்ட உண்மை அறியும் அறிக்கைகள்
தெரிவித்துள்ளதை அது நமக்கு நினைவுபடுத்துகிறது.

இலங்கை எவ்வாறு திட்டமிட்ட முறையில் சிங்கள மயமாக்கப்படுகிறது என்பதையும், தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஒட்டுமொத்த ஒழுங்கின்மை நிலவுவதையும், சித்ரவதை செய்யப்படுவது
போன்ற தொல்லைகள் இழைக்கப்படுவதையும் நமது கவனத்துக்கு அது கொண்டு வருகிறது.

இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை சகஜநிலைக்குத் திரும்பும்பாதையில் எத்தகைய முட்புதர்களும், சேறும் சகதியும், நிறைந்திருக்கின்றன என்பதை அது எடுத்துக் காட்டுகிறது.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவம் ஒரு அவசர நிலை ஆட்சியை நடத்துகிறது என்று அது குறிப்பிடுவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது.
போருக்குப் பிறகு செய்ய வேண்டிய சீரமைப்புப் பணிகளை விரைவில் மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்தி ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகு தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில்
அச்சுறுத்தல்கள் விடப்படுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.

ஈழத் தமிழர்கள் செய்துள்ள தியாகம் மாபெரும் தியாகமாகும். அவர்கள் உள்ளான சித்ரவதைகள், தொல்லைகள், இழிவுகள், துன்பங்கள், அடக்குமுறைகள் கனவிலும் கற்பனை செய்து காண முடியாதவையாகும்.
எண்ணற்ற அயல்நாடுகளில் இருந்து அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு அசாதாரணமானதாக இருக்கிறது. இலங்கை அரசின் கொடுங்கோன்மை மனப்பான்மை பற்றி பல்வேறு நாடுகள் மற்றும் நடுநிலைக் குழுக்களால்
தெரிவிக்கப்பட்டுள்ள கண்டனங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. இவ்வளவுக்கும் பிறகும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னும் கூறப்போனால், அவை
எண்ணிக்கையிலும் அளவிலும் மேலும் மேலும் வளர்ந்து கொண்டுதான் வருகின்றன.

குறுகிய, நீண்ட கால தீர்வு

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு குறுகிய கால, அல்லது நீண்ட கால தீர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இங்கு வலியுறுத்தப்படுகிறது. அவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்,
புலம் பெயர்ந்த தமிழர்களை மறுகுடியமர்த்தல், அவர்களுக்கு மறுவாழ்வளித்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வு காணப்பட வேண்டும்.

கட்டுமானப் பணிகள் மற்றும் கவுரவமான வாழ்க்கை ஒன்றை மேற்கொள்வதற்காக சமூக வாழ்விற்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுவது, ஆகியவை நடுத்தரத் தீர்வுகளில் அடங்கும்.
சொத்துரிமையை மீட்டுத் தருவது, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுவது, மற்ற ஜனநாயக உரிமைகள் வழங்கப்படுவது ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

நீண்ட காலத் தீர்வுகளில், நீண்டதொரு காலமாக விவாதிக்கப்பட்டு, பேசப்பட்டு வரும் அரசியல் தீர்வும் அடங்கும். ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி மிக ஆழமாக, அகன்ற முறையில் நீங்கள்
சிந்திப்பீர்கள் என்றும், அவற்றுக்கான ஜனநாயக முறையிலான சாத்தியமான தீர்வுகளைப் பற்றி உங்களின் மதிப்பு மிகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவிப்பீர்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

எனது உரையை முடிக்கும் முன்பு, உங்கள் அனைவருக்கும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டதற்காகவும், அதன் விவாதங்களில் ஆக்க பூர்வமாகப் பங்களித்தமைக்காகவும் மற்றுமொரு முறை எனது
நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி! வணக்கம்!!

- நன்றி : விடுதலை.


No comments:

Post a Comment